Friday, December 2, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 8                                     
                                               ஓம் ஸ்ரீ சாயிராம்

பேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்
  பெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்!
கூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்
  குறுநகையே விடையாகத் தருவாய் தேவே!
மாசான ஆணவமாம் மலத்தை நீக்கி
  மாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி
தேசான ஞானத்தைத் தருவாய் போற்றி!
  தேவர்க்கும் அரிதான சாயி போற்றி!

Thursday, December 1, 2016

ஸ்ரீகிருஷ்ணர் எங்கிருக்கிறார்?“என்னையன்றி வேறெவரையும் தொழாமல் எவன் இருக்கிறானோ அவன் என்னோடு இருப்பான்; அவனது பாரத்தை நான் எந்நாளும் சுமப்பேன்” என்றும், “என்னையே நினைத்தபடி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடு” என்றும் ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது.

‘நான்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறும் அவர் உனக்கு வெளியேயோ, உனக்குப் புறம்பாகவோ இருப்பவரல்ல. அது உன்னுடைய தெய்வீக மெய்நிலைதான். நீ தியானத்தின் பூரண அமைதிநிலையில், உனது புலன்கள், மனம் மற்றும் அகங்காரத்தை இழுப்பை அகற்றி உணர்வுகளைத் தடுத்த நிலையில், நீ உனக்குள்ளே அதனை இனங்காண்பாய். பகவான் தன்னைச் சாரதியாக அமர்த்திக்கொண்டுள்ள உனது இதயபீடத்தின் குளிர்ந்த அமைதியில் நீ சரண்புகுந்து கொள்ளலாம்.

- ஸ்ரீ சத்திய சாயிபாபா, பிரசாந்தி நிலையம், 23/11/1975

பர்த்தீச்சுரன் பதிகம் - 7

                             
                                                 ஓம் ஸ்ரீ சாயிராம்

யா(ன்)நீயே நீநானே என்னு முண்மை
  எமதறிவிற் கெட்டாத காரணத்தால்
வானேயும் வைகுந்தம் தன்னை நீங்கி
  வந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு
தேனான மொழியாலே மீண்டும் மீண்டும்
  தெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்!
கோனே!நற் கற்பகத்தின் கொம்பே, பர்த்திக்
  கொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே!

Tuesday, November 29, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 6ஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை
  ஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே
காமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே
  கரந்துள்ளே நிற்பதுவதும் யானே என்பாய்!
நாமத்தை வாயாலே சொல்லிப் பாடி
  நாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்
சேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே
  சீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே!

அருஞ்சொற்பொருள்: 
ஆமாமாம் -> ஆம், ஆம், ஆம் (yes, yes, yes - Swami said)
இங்கும் அங்கும் -> இம்மையிலும் மறுமையிலும்

பர்த்தீச்சுரன் பதிகம் - 5ஆண்களிடை ஆணானாய், அரிதாம் பக்தி
  அதுகொண்ட பெண்களிடை பெண்ணாய் ஆனாய்
தேன்மழலைக் குழவியிடை குழந்தை ஆனாய்
  சிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்!
வேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்
  விம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்
பூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே
  போற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே!

அருள்மொழி: நிரந்தர ஆனந்தத்தின் விலைஇவ்வுலகில் எதை அடையவேண்டுமானாலும் அதற்கு ஒரு விலை தரவேண்டும். ஒரு கடையில் கைக்குட்டை வாங்க விரும்பினால் அதற்கு 10 ரூபாய் கொடுக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் நீ கைக்குட்டையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தற்காலிகமான பொருளுக்கே நீ விலை தரவேண்டும் என்றால், நிரந்தர ஆனந்தத்துக்கும் தக்க விலை தரவேண்டும் என்பது இயற்கைதானே? புனிதமானதும், என்றும் புதியதும், தெய்வீகமானதுமான அன்பே அதன் விலை. இது உலகியலான அன்பல்ல. இந்த அன்பு எப்போதும் ஒன்றிணைப்பது, மேடு பள்ளம் இல்லாதது, தேய்வும் வளர்ச்சியும் இல்லாதது. இது எப்போதும் கொடுக்கும், ஒருபோதும் வாங்காது. உலகியல் அன்புக்கும் தெய்வீக அன்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எல்லோரும் உணரவேண்டும். உலகியல் அன்புக்கு வாங்கிக்கொள்ளத்தான் தெரியும், கொடுப்பதே இல்லை; ஆனால் தெய்வீக அன்போ கொடுத்துக்கொண்டே இருக்கும், வாங்கிக்கொள்வது இல்லை.

- பாபா, சாயிஸ்ருதி, கொடைக்கானல், 29/04/1997

Monday, November 28, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 3அன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே
  அன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே
அன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து
  அறவழியில் சேர்க்கின்ற ஐயா! எம்போல்
வன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்
  வார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே
அன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே
  அருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே!