Thursday, June 27, 2013

“நேற்று வந்த கிழவர் யாரென்று நினைத்தீர்கள்?”

1946ல், அதாவது சுவாமிக்கு 20 வயதாக இருந்தபோதே அவரைத் தரிசிக்கவும், பலமுறை சுவாமியின் கருணையை நேரடியாக அனுபவிக்கவும், உபதேச மொழிகளைக் கேட்கவும் எனப் பலவகை பாக்கியங்களை அனுபவித்தவர் கருணாம்பா ராமமூர்த்தி என்ற கண்ணம்மா அவர்கள். தெய்வீக அனுபவக் களஞ்சியமான அவரது Sri Sathya Sai Anandadayi - Journey with Sai என்ற அற்புத நூலிலிருந்து ஓர் அழகிய சம்பவம்:

பாதமந்திரத்தில் ஒரு கண் மருத்துவ முகாம். அது முடிந்ததுமே எல்லாக் கருவிகளையும் மூடிக் கட்டி வைத்தார்கள். அப்போது அங்கே ஒரு கிழவனார் வந்து, “தயவுசெய்து என் கண்ணைச் சோதித்துப் பார்த்து மருந்து கொடுங்க” என்று கெஞ்சினார்.

“கருவிகளெல்லாம் பேக் பண்ணி வச்சுட்டோம்; இப்ப ஒண்ணும் பண்ண முடியாது” என்று இரண்டு டாக்டர்கள் கூறினார்கள். முதியவர் மூன்றாவது மருத்துவரிடம் போய் வேண்டினார். அவர் மனமிரங்கி, கண்களைப் பரிசோதித்துவிட்டு மருந்து கொடுத்தார். அத்தோடு நிற்காமல், “சாயிராம், சாயிராம் என்று சொல்லிக்கொண்டே இருங்கள் பெரியவரே” என்றும் கூறினார்.

மறுநாள் காலையில் டாக்டர்களும், உதவியாளர்களும் சுவாமிக்குப் பாத நமஸ்காரம் செய்வதற்காகப் பிரசாந்தி நிலையத்தின் முன்னால் உட்கார்ந்திருந்தனர்.

சுவாமி நேராக டாக்டர்களிடம் சென்றார். “நேற்றைக்கு ஒரு முதியவர் சிகிச்சைக்கு வந்தாரே, அவரிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார். “எல்லா மருத்துவக் கருவிகளையும் கட்டி வைத்துவிட்டோம், பரிசோதிக்க முடியாதென்று சொன்னோம்” என்றார்கள் முதல் இரண்டு டாக்டர்களும்.

“சுவாமி, அவருடைய கண்களைச் சோதித்து மருந்து கொடுத்தேன்” என்றார் மூன்றாமவர்.

“அதுமட்டுமல்ல, அவரை ‘சாயிராம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்படியும் கூறினாய், அல்லவா?” என்று கூறிய சுவாமி அவருக்குப் பாத நமஸ்காரம் கொடுத்ததுடன் விபூதி சிருஷ்டித்து அவரது நெற்றியில் தமது திருக்கரத்தால் பூசினார். ஒரு மோதிரம் சிருஷ்டித்து அவருடைய விரலில் அணிவித்தார்.

”நேற்று வந்த கிழவர் யாரென்று நினைத்தீர்கள்? அது நானேதான்!” என்றார் அந்த டாக்டர்களிடம் பகவான்.

Wednesday, June 26, 2013

சுவாமி பாடுகிறார்: “கோவிந்தகிருஷ்ண ஜெய்”

பஜனையை விறுவிறுப்பான பாடலோடு தொடங்குங்கள் என்பார் சுவாமி.

அவர் சொல்வதற்கு அவரே முன்னுதாரணம். பாடலில் விறுவிறுப்பு, குரலில் தெறிக்கும் உற்சாகம், முகத்தின் பேரன்பு, சொல்லில் தேன்சுவை என்று அவர் பாடுவதைக் கேட்டு ரசியுங்கள்:


கூடச் சேர்ந்து பாடுங்கள். முடிந்தால் ஆனந்தமாக ஆடுங்கள்!

ஜெய் சாயிராம்!

உத்தராகண்ட் பேரிடர் நிவாரண நிதி அளிக்க விரும்பினால்...

ஓம் ஸ்ரீ சாயிராம்!

உத்தராகண்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு கற்பனைக்கு அப்பாற்பட்டது. அங்கே இன்னும் மீட்புப் பணிகளே முடிந்தபாடில்லை. பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவை நிறுவனத்தின் ‘இயற்கைப் பேரிடர் நிவாரணப் பயிற்சி’ பெற்ற தொண்டர்கள் அங்கே அரசின் அனுமதியோடு விரைந்துள்ளனர்.

மீட்பு, மீட்டோருக்கு ஊர் திரும்ப, பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, அங்கேயே வாழ்வோருக்கு நிவாரணம் தர என்று பல தளங்களில் இந்தப் பணி இயங்க வேண்டியதிருக்கிறது.

சாயி நிறுவனம் இப்பணியை பகவானின் விருப்பத்துக்கிணங்க சிரமேற்கொண்டு தொடங்கியுள்ளது. இப்பணிகளுக்கான நிதி வழங்க விரும்பும் அன்பர்களுக்கு உதவும் வகையில் கீழ்க்கண்ட தகவல் தரப்படுகிறது:

Name of Account:  Sri Sathya Sai Trust, U.P.
Name of Bank: Indian Overseas Bank, Rishikesh, Uttarakhand.
Branch Code: 1148
IFSC Code: IOBA0001458
A/C No.: 145801000000999
Branch: Muni ki Reti, Rishikesh, Uttarakhand, India
எதைக் கொடுக்கிறோமோ அதுவே நம்முடன் வருகிறது.

மானவ சேவையே, மாதவ சேவை! 

Tuesday, June 25, 2013

அருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்

ஓம் ஸ்ரீ சாயிராம்


தெருவில் வாங்கக் கிடைக்கும் பூவோ பழமோ இறைவனுக்குத் தேவையில்லை. தூய இதயம் என்னும் மணமுள்ள மலரையும், மனம் என்னும் கனியையும் அவனிடம் கொண்டு வாருங்கள். இவை ஆன்ம சாதனையினால் பக்குவப்பட்டவையாக இருக்க வேண்டும். இவையே அவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவை; சந்தையில் விற்கும் தயார்ப் பொருள்களல்ல. விலைக்கு வாங்கும் பொருள்கள் உன் மனதை உயர்த்த வல்லவையல்ல. ஆன்ம சாதனையே மனதை உயர்த்தும். 

இந்தச் சுவையை அறிய வேண்டுமானால் நீ நல்லோரின், மகான்களின் கூட்டத்தில் இருக்கவேண்டும். நல்லவற்றைச் சிந்திப்பதில் மகிழ்ச்சி அடையவேண்டும். ஏதாவது செய்து உன் ஆனந்தத்தையும் விவேகத்தையும் அதிகரித்துக் கொள். இவற்றால் உன்னை நிரப்பிக் கொண்டால், தேவைப்படும்போது நீ இந்தச் சேகரத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- சுவாமியின் அருளுரை, செப்டம்பர் 1, 1958

“யாருக்கு அட்மிஷன், சுவாமிக்கா, உனக்கா?”

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா கூறினால் அதற்கேற்பச் சூழல் மாறுமேயன்றி, அவருடைய சொல்லுக்கு மறுசொல் கிடையாது. பகவானின் அருளைப் பரிபூரணமாக அனுபவித்தவரும், பர்த்தியில் பஜனைப் பாடகரும், உலகெங்கும் சென்று சாயி லீலைகளைப் பேசி மகிழ்ந்தவரும், ஆப்பிரிக்க-இந்தியரும், மருத்துவருமான அமரர் டாக்டர். D.J. காடியா அவர்கள் எழுதிய Sai Smaran நூலிலிருந்து ஒரு சம்பவம், தமிழில்:

என்னுடைய தந்தையார் எனக்கு பாம்பேயிலிருந்து லண்டன் போவதற்கு ஆலிடாலியா ஏர்லைன்ஸ் மூலம் புதன்கிழமை புறப்படும்படியான ஒருவழி விமான டிக்கட்டை அனுப்பிவைத்தார். ஆனால் சுவாமி எனக்குக் கூறிய நாளோ வியாழக்கிழமையாக இருந்தது!

நான் ஆலிடாலியா அலுவலகத்துக்கு என் சீட்டைக் கன்ஃபர்ம் செய்வதற்காகச் சென்றேன். அங்கிருந்த ஊழியர் “மன்னிக்க வேண்டும். ஒரு எந்திரக் கோளாறு காரணமாக புதன்கிழமை ஃப்ளைட் கேன்சல் ஆகிவிட்டது. நாளைக்கு, அதாவது வியாழக்கிழமை, புறப்படும் TWA விமானத்தில் நீங்கள் செல்ல ஏற்பாடாகியுள்ளது” என்றார். இப்படியாக சுவாமியின் வார்த்தையே நடந்தது. நான் வியாழனன்று லண்டனுக்குப் பறந்தேன்.

இந்த தாசன் (டாக்டர் காடியா) செப்டம்பர் 12, 1963 அன்று நேராக வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரப் பள்ளிக்கு (School of Tropical Medicine and Hygiene) சென்றேன். அங்கிருந்த செயலர், “நீ வெளிநாட்டிலிருந்து வருகிறாய். குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்கு முன்னால் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று இங்கே வழிமுறை உள்ளது. நாங்கள் முன்னரே உன் அட்மிஷனை உறுதி செய்திருந்தால் மட்டுமே நீ இங்கே சேர முடியும்” என்றார்.

இதே காரணத்தினால் எனக்கு ஸ்காட்லாந்திலுள்ள கிளஸ்கோ, எடின்பர்க் ஆகிய இடங்களிலும் இடம் மறுக்கப்பட்டது. நான் மிகவும் மனமுடைந்து போனேன். அங்கிருந்த கடுங்குளிரும் எனக்குச் சாதகமாக இருக்கவில்லை. கிளாஸ்கோவில் ஒரு ஓட்டலில் நான் தங்கியிருந்தேன். தூங்கப் போகுமுன், “ஓ சுவாமி! உன் மர்மத்தை யாரே அறிவார்! ‘இங்கிலாந்து போகுமுன்னால் அங்கே எதிலாவது இடம் கிடைத்திருக்க வேண்டும்’ என்று நான் சொன்னதற்கு நீங்கள் “யாருக்கு இடம் கிடைத்திருக்க வேண்டும், சுவாமிக்கா, உனக்கா?” என்று கேட்டீர்கள். என்னாலானதை நான் செய்துவிட்டேன். இப்போது உன் உதவியை நாடி நிற்கிறேன்” என்று பிரார்த்தனை செய்தேன்.

அன்றிரவு சுவாமி என் கனவில் வந்தார்! “மகனே, ஏன் கவலைப்படுகிறாய்? லிவர்பூலுக்கு நாளை சீக்கிரமே போ. அங்கே உனக்கு ஓரிடத்தை நான் ரிசர்வ் செய்து வைத்திருக்கிறேன். உன்னை நான்தானே இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தேன். அப்படியிருக்கப் பாராமுகமாக இருப்பேனா?” என்று கேட்டார்.

எங்கே தூங்கியெழுந்தால் இடத்தின் பெயர் மறந்துவிடுமோ என்று பயந்து உடனேயே எழுந்து ‘லிவர்பூல்’ என்று எழுதிவைத்துக் கொண்டேன். சுவாமியின் அன்பர்களுடன் பேசும்போதுகூட நான் சுவாமி கனவில் வந்தால் அதன் முக்கியமான அம்சங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுண்டு.

மறுநாள் மதியம் 4:00 மணிக்கே லிவர்பூல் ஸ்டேஷனுக்குப் போய்விட்டேன். நான் கூப்பிட்ட டாக்ஸி டிரைவர், “School of Tropical Medicine and Hygiene பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அரைமணி நேரத்தில் ஆஃபீசை மூடிவிடுவார்கள். கவலைப்படாதீர்கள், நான் உங்களை அதற்குள் கொண்டு சேர்க்கிறேன்” என்றார்.

நான் படியேறிக்கொண்டு இருக்கும்போது, செயலர் ஆஃபீசை மூடிவிட்டு இறங்கப் போனார். என்னைப் பார்த்ததும் “நீங்கள் மாணவரா? அட்மிஷனுக்கு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். “யெஸ் சார்!” என்றேன் உரக்க.

அவர் கதவைத் திறந்தார். “மேலே வாருங்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இதுவரை ஒரு சீட்டும் இருக்கவில்லை. ஆனால் ஒரு விண்ணப்பதாரர் லண்டனிலேயே சேர்ந்துவிட்டார். இப்போதுதான் தந்தியில் தகவல் வந்தது. இன்னொரு விண்ணப்பதாரர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கே வந்து பார்க்கவில்லை. அந்த இடத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். சரியான நேரத்தில் இங்கே நீங்கள் வந்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்!” என்றார் அவர்.

“நிச்சயம் சார். என் அறைக்குத் திரும்பிப் போனதும் அதைச் செய்துவிடுகிறேன். இப்போது நான் சேர்க்கைக்கான படிவங்களை நிரப்புகிறேன்” என்று கூறினேன். அன்று இரவில் என் ஓட்டல் அறைக்குத் திரும்பியவுடன் எல்லாவற்றுக்கும் நன்றி கூறி சுவாமிக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் சனாதன சாரதியில் 1964ம் ஆண்டு வெளியாயிற்று.

Monday, June 24, 2013

அருள்மொழி: ஆனந்தத்தின் மூலாதாரம்

ஓம் ஸ்ரீ சாயிராம்



ஆனந்தத்தின் மூலாதாரம் பகவானுக்கு அர்ப்பணமாக இருத்தலே. வேறெதுவுமே அத்தகைய சத்தியமான, நித்தியமான ஆனந்தத்தைத் தரமுடியாது. கடவுளுடன் உனது உறவை நினைவில் வைத்திரு.

அது ஏதோ நாட்டுப்புறக் கதையோ, தேவதைக் கதையோ, கட்டுக்கதையோ அல்ல. காலத்தின் தொடக்கத்திலிருந்து அவ்வுறவு உள்ளது. காலத்தின் முடிவுவரை அது நீடிக்கும்.

ஒவ்வொருவருவமே தர்ம மார்க்கத்தில் பிறந்து, கர்ம மார்க்கத்தில் பயணித்து, சாது மார்க்கத்தின் வழியே ஓடி பிரம்ம மார்க்கத்தை அடைகிறார்கள். சாது மார்க்கத்துக்கும், கர்ம மார்க்கத்துக்கும் ஞானேந்திரியங்கள் ஒளியூட்டுகின்றன. ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் மாசுபடாமல் வைத்திருங்கள்.

புல்லைத் தின்று கழுநீரைக் குடிக்கும் பசு, சுவையான, போஷாக்கு மிக்க பாலைத் தருகிறது. அதேபோல, உனது புலன்களின் வழியே நீ பெறும் அனுபவங்கள் நீ இனிமையும் கருணையும் கொண்டவனாக மாற உதவட்டும். தூய பக்தியோடு உனது வாழ்க்கையை அமைதியாக, ஆனந்தமாக வாழ்.

- சுவாமியின் அருளுரை, செப்டம்பர், 1958.

Friday, June 14, 2013

சனாதன சாரதி - தமிழ்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை, உபதேசங்கள், பக்தர்களின் அனுபவங்கள், ஆன்மீக வினா-விடை (பகவானே அருளியவை) என்று பலவற்றையும் தாங்கித் தமிழில் வெளிவருகிறது சனாதன சாரதி.

முதல் இடுகையிலேயே கூறியபடி, சற்றேறக்குறைய 1953ஆம் ஆண்டு முதல் சுவாமி பொதுவில் சொற்பொழிவுகள் நிகழ்த்தத் தொங்கினார். தனது பேச்சுக்கள் மேடைப்பேச்சுக்கள் அல்ல, உரையாடல் என்று சுவாமி கூறுவார். மிகக் கடினமான வேதாந்தக் கருத்துக்களையும் அவர் எளிய மொழியில், உதாரணங்களோடு பொருத்திக் கூறுகையில், தனக்காகவே அவர் விளக்கியது போலப் பெருங்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்.

அப்படி இரண்டு அருளுரைகள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகின்றன. இவை தவிர மேலே கூறிய அம்சங்களும் உண்டு. உலகெத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் தமிழ் சனாதன சாரதியைச் சந்தா கட்டிப் பெறமுடியும்.

சந்தாத் தொகை:

இந்தியாவுக்குள்:

ஒரு வருடம்          - ரூ.  60.
இரண்டு வருடம்  - ரூ. 120.
மூன்று வருடம்    - ரூ. 180.

வெளிநாடுகளில்:

ஒரு வருடத்துக்கு

அமெரிக்க டாலர் - 19. (இந்திய ரூ. 850)

சந்தாத் தொகைக்கான காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் ஆகியவை ‘Sri Sathya Sai Books & Publications Trust - Tamil Nadu’ என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து DD அல்லது மணி ஆர்டர் மட்டுமே ஏற்கப்படும்.

மணி ஆர்டர் அனுப்புபவர்கள் தமது முழு முகவரியைத் தெளிவாக எழுதி அனுப்பவேண்டும்.

சந்தாத் தொகை அனுப்பவேண்டிய முகவரி:

ஸ்ரீ சத்ய சாய் புக்ஸ் & பப்ளிகேஷன்ஸ் டிரஸ்ட் - தமிழ்நாடு
7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை - 600028

Sri Sathya Sai Books & Publications Trust - Tamil Nadu
7, Sundaram Salai, Raja Annamalaipuram,
Chennai - 600028
Tamil Nadu,
INDIA

e-Mail: sssbpttn2010@gmail.com
Phone: 044 24346255

Monday, June 10, 2013

சாயி பஜன்: விநாயகா, விநாயகா!


ஒரு மிக அழகான வினாயகர் பஜனையோடு பகவானின் ஆராதனையைத் தொடங்கலாமா?

இதோ அந்த பஜனைப் பாடல் வரிகள்:

விநாயகா, விநாயகா
விஸ்வாதாரா விநாயகா
விநாயகா, விநாயகா.
சித்தி விநாயக பவபய நாசா
சுரமுனி வந்தித ஸ்ரீ கணேசா
விஸ்வாதாரா விநாயகா! 

ஜெய் சாயிராம்!

இணையற்ற அருள்மொழி - 01

எப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளிய அற்புத மொழிகள் ஆயிரமாயிரம். பாமரரும் பண்டிதரும் கூடிய சபையில் அவர் அருள்மொழி வழங்கினால், ஒவ்வொருவருக்கும் அவருக்கென ஒரு செய்தி இருக்கும். அவர் சுமந்து வந்த கேள்விக்கு விடை இருக்கும். அவருக்கென ஒரு வழிகாட்டல் கிடைக்கும். “இது வறட்டுத் தத்துவம், எனக்குப் புரியாது” என்று எவரும் நினைக்க வாய்ப்பே இருக்காது.

வேதசாரத்தை எளிய சொற்களில், அன்றாட வாழ்விலிருந்து எடுத்த உதாரணங்களோடு, வெகு சரளமாக வழங்குவது பகவானின் அருட்பிரவாகம். தமிழில் 36 தொகுதிகள் 42 புத்தகங்களாக (சில தொகுதிகள் இரண்டு பகுதிகளாக) ‘பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தவிர, ‘சனாதன சாரதி’ என்ற தமிழ் மாத இதழும் வெளியாகிறது.

பகவான் திருவாய் மலர்ந்தருளிய எல்லாமே விலைமதிப்பற்ற வைரங்கள்தாம் என்றாலும், எவர் மனதையும் கேட்டவுடனே கவரும் தன்மை படைத்தவை சில அருள்மொழிகள். அவற்றில் ஒன்று “எப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே” (Help Ever, Hurt Never) என்பதாகும்.

பகவானின் அருள்மொழிகளை நினைவுகூர்வதும், அவற்றின் அருமை பெருமைகளையும், அவற்றுள் அடங்கிய அற்புதப் பாடங்களையும் எளியேனின் அறிவுக்கேற்ப விவரிக்க, விளக்க முயல்வது  இந்த வலைப்பக்கத்தின் நோக்கம்.

தவிர, பகவானின் வியத்தகு வாழ்க்கையின் சில அம்சங்களை, நமக்கு எட்டியவரை மீளக்கூறி, அதன் இனிமையிலே தோய்வதும், தோய்விப்பதும்கூட இந்த எளியேனின் முயற்சியில் அடங்கும்.

பகவான் இவற்றைச் சாத்தியப்படுத்தட்டும்.

ஓம் ஸ்ரீ சாயிராம்!