Monday, December 19, 2016

சின்ன கதை: சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண்டதா?



இருபது வருடங்களுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்து, பரிட்சையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற ஆசிர்வதிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். நீ முயற்சி எடுக்கவேண்டும், கடவுள் சங்கல்பத்தின்படி முடிவு இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் முதல்வகுப்பில் மிக அதிக மார்க்குடன் தேர்ச்சிபெற்றார். அவர் மறுபடியும் என்னிடம் வந்து ஒரு வேலை கிடைக்க ஆசிர்வாதம் கேட்டார். ஒரு மாதத்தில் வேலை கிடைத்தது.

சில மாதங்களுக்குப் பின் என்னிடம் வந்து, “எனக்கு வேலை கிடைத்துவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அலுவலகத்தில் என்னோடு வேலை பார்க்கும் டைப்பிஸ்டை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றார். உனது பெற்றோருக்குச் சம்மதமானால் நீ அவளை மணந்துகொள், ஆனால் உன் பெற்றோர் சம்மதிப்பது கடினம் என்றேன். நான் சொன்னதைக் கேட்க அவர் தயாராக இல்லை. என் பெற்றோர் சொல்லை மீறி நான் அவளை மணக்கத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை அவளை நான் மணக்கமுடியாமல் போனால் என் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்றார் அவர். உன் பெற்றோரின் சம்மதத்தை நீ பெற்றாக வேண்டும் என்றேன் நான். அவரது பெற்றோரை மிகுந்த கட்டாயத்துக்கு உள்ளாக்கவே, வேறு வழியில்லாமல் அவர்கள் சம்மதித்தனர்.

திருமணம் ஆனது. ஓராண்டுக்குப் பிறகு இருவரும் என்னைப் பார்க்க வந்தனர். தமக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டனர். மகன் பிறந்ததும் செலவினம் அதிகரித்தது. அவருடைய மனைவி வேலையை விட்டுவிட்டார். தனக்குப் பதவி உயர்வு வேண்டுமென்று கோரி மீண்டும் அவர் என்னிடம் வந்தார். உலக விஷயங்களில் அவர் சற்றே அசடுதான் என்றாலும் சுவாமியின்மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்தார். நான் அவரை ஆசிர்வதித்தேன், அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்தது.

அதன்பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் வரவில்லை. அந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. பின்னர் மீண்டும் என்னிடம் வந்தார். “சுவாமி எனக்குக் குடும்பவாழ்க்கை அலுத்துப் போய்விட்டது. எனால் அந்த பாரத்தைச் சுமக்கமுடியவில்லை. அதிலிருந்து வெளியேவர விரும்புகிறேன். எனக்கு இங்கேயே ஆச்ரமத்தில் ஒரு சிறிய வேலை கொடுங்கள். என் குடும்பம் என்மீது ஒரு சர்ப்பத்தைப் போல இறுகச் சுற்றிக்கொண்டிருக்கிறது” என்றார் அவர்.

“சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண்டதா? இல்லை, உன்னைச் சுற்றிக்கொள்ள அதை நீ அனுமதித்தாயா?” என்று கேட்டேன் நான்.

- பாபா (சனாதன சாரதி, ஜூலை 2015)

Thursday, December 15, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-5


கேதாரம் பத்ரி காசி 
  கயிலாயம் திருவை குந்தம்
போதாதெனக் கருதி தானோ 
  பூமண்டலத்தில் நீ இன்று
மாதீஸ்வ ராம்பா மடியில் 
  மகனாக வந்து பிறந்தாய்
பாதார விந்தம் பணிவோம், 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்: கேதாரநாத், பத்ரி, காசி, கைலாயம், திருவைகுண்டம் என்று இந்தப் புனிதத் திருப்பதிகள் போதாது, (பூமியில் மற்றுமோர் ஒப்பற்ற திருப்பதியை உண்டாக்குவோம் என்று கருதி) நீ மாதர்க்கரசி ஈஸ்வராம்பாவின் மடியிலே வந்து மகனாகப் பிறந்திட்டாயோ! (அத்தகைய மற்றுமோர் தலமான) பர்த்தியில் ஈசனாக வந்து பிறந்த எமது ஞானகுருவே, உமது பாதங்களைப் பணிகின்றோம். 

Saturday, December 10, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 4


அறியாமை இருளில் மூழ்கி, 
 அழிகின்ற சொத்து நாடி,
சிறிதான இன்பம் எல்லாம் 
 பெரிதென்று கொண்டு தேடி,
முறையல்ல செய்து வாடும்
 மூடத்தனத்தை மாற்றும்
நிறைபாதம் போற்று கின்றோம்,
 பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
எந்தெந்த சொத்துக்கள் நிரந்தரமல்லவோ அவற்றைத் தேடிச் சேர்க்கவும், அற்பமான இன்பங்களைப் பேரின்பம் எனக் கருதி அவற்றைத் தேடிப் பின்னே ஓடவும் செய்கின்ற மூடத்தனமான முயற்சிகள் எல்லாம் எமது அறியாமை என்னும் இருள்தன்மையால் உண்டாவன ஆகும். நிறைவான உமது பாதங்களே அத்தகைய அறியாமையை மாற்ற வல்லவை என்று போற்றுகிறோம், பர்த்தீசனான எம் ஞானகுருவே!

Friday, December 9, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 3

ஓம் ஸ்ரீ சாயிராம்

எளியார் உளார் இலாதார் 
  என்றேதும் பேதம் இலனாய்
அளியால் அனைவ ருக்கும் 
  அருள்செய்யும் அன்பு வடிவே
விளியாத முன்னம் வந்து 
  வீற்றாயே எங்கள் மனதில்
பளிங்கான பாதம் பணிவோம் 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
இவன் எளியவன், இவன் செல்வந்தன், இவன் ஏழை என்பதாக எந்த வேறுபாடும் காண்பிக்காமல், பெருங்கருணையால் எல்லோருக்கும் ஒன்றுபோல அருள்செய்யும் அன்பின் வடிவானவனே! நாங்கள் உன்னை அழைப்பதற்கும் காத்திராமல் எங்கள் நெஞ்சில் வந்து நிறைந்துவிட்டாய். பர்த்தீசனான ஞானகுருவே, பளிங்குபோன்ற உன் பாதங்களைப் பணிகிறோம்.

Thursday, December 8, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 2


மலிதீது மாந்த ரிடையே
  மகதேவன் இல்லை யெனவே
ஒலிமீறி ஓங்கி எழவும்
  உளனிங் கெனாதுன் அருளால்
கலிகால மதனில் கடிதே
  காப்பாற்ற வந்த இறையே!
பொலிபாதம் போற்று கின்றோம்,
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
மனிதர்களிடையே தீக்குணங்கள் அதிகரித்து, பேரிறைவன் என்பவனே ஒருவனில்லை என்பதான இரைச்சல் அதிகரித்துப்போன இந்தக் கலிகாலத்தில், “இதோ நான் இருக்கிறேன்” என்று பெருங்கருணையோடு விரைந்து அவதரித்து எம்மைக் காப்பாற்றுவதற்கென வந்த பர்த்தீசனான ஞானகுருவே, உனது ஒளிமிகுந்த பாதங்களைப் போற்றித் தொழுகிறோம்.

Wednesday, December 7, 2016

Loving God: Deepavali Darshan


Once baba observed a mother trudging along, a baby on her hip, a heavy basket on her head. The next day was Deepavali, the Festival of Lights, when new clothes are a must. Baba had the car stopped. In reply to our questions she told us she had heard of Sai Baba, that a few people she knew had gone on Pilgrimage to Puttaparthi and that she she too had taken a vow to make the journey and have darshan of the Baba. Baba blessed both mother and child, and gave her money for new clothes, declaring, "Your vow is fulfilled. I am Sai Baba". She fell at Baba's Feet again and again, stood staring at the car as it sped along wondering whether it was all a dream.

From Loving God by Sri N. Kasturi

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 1


                                                   ஓம் ஸ்ரீ சாயிராம்

வேதார விந்தன் விடையன் 
 மேவிப் பிணைந்த வடிவே
ஆதார மூலப் பொருளே 
  அளவற்ற ஞானத் திருவே
ஓதா துணர்ந்த ஒளியே 
  உயர்பர்த்தி வந்த உயர்வே
பாதார விந்தம் பணிவோம் 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுளரும் ஒன்றாகிய வடிவம் கொண்டோனே, பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரமானவனே, எல்லையற்ற ஞானச்செல்வனே, கல்வி கற்பதற்கே அவசியமின்றி அனைத்துமறிந்த ஒளிபொருந்திய அறிவை உடையோனே, புட்டபர்த்தியில் அவதரித்த மேலான பொருளே, உனது பாத கமலங்களைப் பணிகிறோம், எமது ஞானகுருவாகிய பர்த்தீசனே!

குறிப்பு:
வேதாரவிந்தன் விடையன் - வேதா (பிரம்மா), அரவிந்தன் (திருமால்), விடையன் (ரிஷபம் ஏறிய சிவபெருமான்)

Tuesday, December 6, 2016

ஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்

                                                 ஓம் ஸ்ரீ சாயிராம்

('நாதவிந்து கலாதீ நமோநம’ என்ற ராகத்தில் பாடவும்)

புட்ட பர்த்தி புரீசா நமோநம
 புத்தி சக்தி கொடுப்பாய் நமோநம
  புவியெ லாம்புகழ் போதா நமோநம  புவனேசா 

 புண்ய கீர்த்தன நாதா நமோநம
  புனித கொண்டமர் பேரா நமோநம
   போற்று வோர்க்கருள் பாதா நமோநம  புவிமீதில்

சிட்டர் துன்பம் துடைப்பாய் நமோநம
  சித்தி ராவதி தீரா நமோநம 
    செவ்வெழில் உடை பூண்டாய் நமோநம  பரத்வாஜா

 திங்கள் சூடிய தேவே நமோநம
   தேவ தேவியர் யாவும் ஒரேவுரு
     சேர்ந்த தெய்வமே பாபா நமோநம  பரந்தாமா

அட்ட சித்தி ப்ரதாதா நமோநம
  ஆதி சக்தி சொரூபா நமோநம
    அன்பெனுஞ் சுடர் சோதீ நமோநம  அழகேசா

 அற்பர்க்கும் அவஞ் செய்கின்ற பேருக்கும்
   அருளியே மன மாற்றங்கள் தந்திடும்
     அற்புதா, அகளங்கா நமோநம  அருளாளா

வட்டமாய்ச் சிகை வாய்ந்த வரோதயா
  வளரெழில் நகை பூண்ட நிராமயா
    வல்ல கலியை வதைப்பாய் நமோநம  வரந்தாராய்

 மற்றவர்க்கென வாழ்கின்ற த்யாகமும்
  மற்றுமோர் பிறப்பில்லாத ஞானமும்
   வரமளித்திட வேண்டும் நமோநம    சத்யசாயீ!

குறிப்பு:
புனித கொண்டமர் பேரா - புனிதரான கொண்டமராஜுவின் பேரனே! 

Saturday, December 3, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 10


                                                   ஓம் ஸ்ரீ சாயிராம்

எம்மையெம் மிடமிருந்தே காப்போன் நீயே!
  எல்லார்க்கும் எல்லாமும் ஆவோன் நீயே!
இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் நீயே!
  ஏழிசையில் நாதமென நின்றாய் நீயே!
செம்மைக்குள் சேர்கின்ற செய்யோன் நீயே!
  சிறுமதியைத் தீய்க்கின்ற சீரோன் நீயே!
அம்மையென அப்பனென ஆனோன் நீயே!
  ஆரறிவார் நின்புகழைச் சாயீ முற்றும்!

(பர்த்தீச்சுரன் பதிகம் முற்றும்)

பர்த்தீச்சுரன் பதிகம் - 9


                                             ஓம் ஸ்ரீ சாயிராம்

கொண்டமரின் வழிவந்தாய் ஈஸ்வ ராம்பா
  கும்பிக்குள் ஒளிப்பந்தாய் குடியே றிட்டாய்!
அண்டையிலே கர்ணத்தின் இல்லம் போந்தாய்,
   அன்னைபல ராவதெதும் புதுமை யன்றே!
வண்டமரும் தாமரையாய்ப் பாதம், கண்கள்,
  வணங்கியவர் வாழ்வுக்குப் பொறுப்பை ஏற்றுக்
கொண்டதிருக் கைகளிவை கொண்டோய் வாழி!
  கொடுப்பதுவே கொள்கையெனக் கொண்டாய் சாயீ!


குறிப்புகள்:
கொண்டமரின் வழி வந்தாய் - கொண்டமராஜு அவர்களின் பேரனாகத் தோன்றினாய்
கர்ணம் - கர்ணம் சுப்பம்மா, அண்டை வீட்டுக்காரர்

Friday, December 2, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 8



                                     
                                               ஓம் ஸ்ரீ சாயிராம்

பேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்
  பெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்!
கூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்
  குறுநகையே விடையாகத் தருவாய் தேவே!
மாசான ஆணவமாம் மலத்தை நீக்கி
  மாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி
தேசான ஞானத்தைத் தருவாய் போற்றி!
  தேவர்க்கும் அரிதான சாயி போற்றி!

Thursday, December 1, 2016

ஸ்ரீகிருஷ்ணர் எங்கிருக்கிறார்?



“என்னையன்றி வேறெவரையும் தொழாமல் எவன் இருக்கிறானோ அவன் என்னோடு இருப்பான்; அவனது பாரத்தை நான் எந்நாளும் சுமப்பேன்” என்றும், “என்னையே நினைத்தபடி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடு” என்றும் ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது.

‘நான்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறும் அவர் உனக்கு வெளியேயோ, உனக்குப் புறம்பாகவோ இருப்பவரல்ல. அது உன்னுடைய தெய்வீக மெய்நிலைதான். நீ தியானத்தின் பூரண அமைதிநிலையில், உனது புலன்கள், மனம் மற்றும் அகங்காரத்தை இழுப்பை அகற்றி உணர்வுகளைத் தடுத்த நிலையில், நீ உனக்குள்ளே அதனை இனங்காண்பாய். பகவான் தன்னைச் சாரதியாக அமர்த்திக்கொண்டுள்ள உனது இதயபீடத்தின் குளிர்ந்த அமைதியில் நீ சரண்புகுந்து கொள்ளலாம்.

- ஸ்ரீ சத்திய சாயிபாபா, பிரசாந்தி நிலையம், 23/11/1975

பர்த்தீச்சுரன் பதிகம் - 7

                             
                                                 ஓம் ஸ்ரீ சாயிராம்

யா(ன்)நீயே நீநானே என்னு முண்மை
  எமதறிவிற் கெட்டாத காரணத்தால்
வானேயும் வைகுந்தம் தன்னை நீங்கி
  வந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு
தேனான மொழியாலே மீண்டும் மீண்டும்
  தெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்!
கோனே!நற் கற்பகத்தின் கொம்பே, பர்த்திக்
  கொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே!

Tuesday, November 29, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 6



ஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை
  ஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே
காமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே
  கரந்துள்ளே நிற்பதுவதும் யானே என்பாய்!
நாமத்தை வாயாலே சொல்லிப் பாடி
  நாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்
சேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே
  சீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே!

அருஞ்சொற்பொருள்: 
ஆமாமாம் -> ஆம், ஆம், ஆம் (yes, yes, yes - Swami said)
இங்கும் அங்கும் -> இம்மையிலும் மறுமையிலும்

பர்த்தீச்சுரன் பதிகம் - 5



ஆண்களிடை ஆணானாய், அரிதாம் பக்தி
  அதுகொண்ட பெண்களிடை பெண்ணாய் ஆனாய்
தேன்மழலைக் குழவியிடை குழந்தை ஆனாய்
  சிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்!
வேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்
  விம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்
பூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே
  போற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே!

அருள்மொழி: நிரந்தர ஆனந்தத்தின் விலை



இவ்வுலகில் எதை அடையவேண்டுமானாலும் அதற்கு ஒரு விலை தரவேண்டும். ஒரு கடையில் கைக்குட்டை வாங்க விரும்பினால் அதற்கு 10 ரூபாய் கொடுக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் நீ கைக்குட்டையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தற்காலிகமான பொருளுக்கே நீ விலை தரவேண்டும் என்றால், நிரந்தர ஆனந்தத்துக்கும் தக்க விலை தரவேண்டும் என்பது இயற்கைதானே? புனிதமானதும், என்றும் புதியதும், தெய்வீகமானதுமான அன்பே அதன் விலை. இது உலகியலான அன்பல்ல. இந்த அன்பு எப்போதும் ஒன்றிணைப்பது, மேடு பள்ளம் இல்லாதது, தேய்வும் வளர்ச்சியும் இல்லாதது. இது எப்போதும் கொடுக்கும், ஒருபோதும் வாங்காது. உலகியல் அன்புக்கும் தெய்வீக அன்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எல்லோரும் உணரவேண்டும். உலகியல் அன்புக்கு வாங்கிக்கொள்ளத்தான் தெரியும், கொடுப்பதே இல்லை; ஆனால் தெய்வீக அன்போ கொடுத்துக்கொண்டே இருக்கும், வாங்கிக்கொள்வது இல்லை.

- பாபா, சாயிஸ்ருதி, கொடைக்கானல், 29/04/1997

Monday, November 28, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 3



அன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே
  அன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே
அன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து
  அறவழியில் சேர்க்கின்ற ஐயா! எம்போல்
வன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்
  வார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே
அன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே
  அருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே!

பர்த்தீச்சுரன் பதிகம் - 4


அங்கியினை மேலேற்றி அங்கை கீழாய்
  அழகாகச் சுற்றியபின் அதனில் பாங்காய்ப்
பொங்கிவரும் பூதியினைத் தருவாய், தந்தே
  போக்கிடுவாய் போகாத நோய்கள் கூட!
வெங்கதிரின் ஒளியோனே! விரிந்த அண்டம்
  விதமாகச் சமைத்தோனே, வேதப் பொருளே!
சங்கரனே சக்கரனே படைப்பின் தேவே!
  சாயீசா பர்த்தீசா தருவாய் பாதம்!

அருஞ்சொற்பொருள்:
பூதி - விபூதி;
சக்கரன் - சுதர்சன சக்கரம் ஏந்திய விஷ்ணு;
படைப்பின் தேவு - பிரம்மன்

Sunday, November 27, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 2



இணங்காரை நண்பரென எண்ணிக் கொண்டு
  இல்லாத செல்வத்துக் கேங்கிக் கொண்டு
நிணந்தன்னை உணவென்று நித்தம் தின்று
  நெறியில்லா நெறிநின்று நெஞ்சில் அதனை
வணங்காத சுதந்திரமென்(று) இறுமாப் புண்டு
  வாழுகிறோம்! வந்தாய்நீ எம்மைக் காக்க!
மணம்வீசும் மலர்சூழும் பர்த்தீச் சுரனே
  மலர்ப்பாதம் தரவேணும் மாந்தர்க் கரசே!

Saturday, November 26, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 1

                                                             ஓம் ஸ்ரீ சாயிராம்

வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை
  வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை
மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள்
  மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே
நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன்
  நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை
சாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய்
  சத்தியனே நித்தியனே சாந்தப் பொருளே!